
சிறிய அணு உலைகள் (SMR) கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வரும் இந்தியா; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய எரிசக்தித் தேவைகள் அதிகரித்து வரும் சூழலில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயக்கப்படும் தரவு மையங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குத் தூய்மையான, நம்பகமான மின்சாரத்தை வழங்கும் தீர்வாக சிறிய மாடுலர் அணு உலைகள் (Small Modular Reactors - SMRs) முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த SMRs-களை உருவாக்க உலக வல்லரசுகளிடையே தீவிரப் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் முன்னிலை வகிக்கின்றன. சீனா, 100 மெகாவாட் திறன் கொண்ட நில அடிப்படையிலான SMR சோதனைக் கட்டமைப்பைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. மறுபுறம், ரஷ்யா இந்தப் பிரிவில் முன்னோடியாக உள்ளது.
இந்தியா
இந்தியாவின் நிலை
இந்தியாவைப் பொறுத்தவரை, 2070 க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் இலக்கை அடைவதற்கான தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையம், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பாரத் சிறிய மாடுலர் உலை (Bharat Small Modular Reactor - BSMR) அமைப்பைத் தீவிரமாக உருவாக்கி வருகிறது. அத்துடன், இந்தியா தனது 100 GW அணுசக்தி இலக்கை 2047 க்குள் அடைவதற்காக, SMR தொழில்நுட்பத்தில் ரஷ்யாவின் ரோசாட்டம் மற்றும் பிரான்ஸின் EDF போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த SMR தொழில்நுட்பமானது, குறைவான மூலதனச் செலவு மற்றும் விரைவான கட்டுமானத்தின் காரணமாக, உலகளாவிய எரிசக்தித் துறையை மறுவரையறை செய்யும் திறன் கொண்டது என நிபுணர்கள் கருதுகின்றனர்.