
குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் முதலியன சிறப்பாக நடக்கும்.
எல்லா சிவன் கோயில்களிலும் 'சிவாய நம' என்னும் மந்திரம் மட்டுமே ஒலிக்கும்.
ஆனால் நாம் அன்றையதினம் குமரிக்கு சென்றால் அங்குள்ள 12 சிவன் கோயில்களில் மட்டும் 'கோவிந்தா' 'கோபாலா' என்ற நாராயணின் நாமம் தான் ஒலிக்கும் என்பது நம்முள் பலருக்கு தெரியாது.
இது ஏனென்றால் சிவனும் நாராயணனும் ஒன்று தான், வேறில்லை என்பதை உணர்த்ததான் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு புராணகதைகளும் உள்ளதாக கூறுகிறார்கள்.
கன்னியாகுமரியில் உள்ள திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்காடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்காடு, திருப்பன்றிக்கோடு, மேலாங்காடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் தான் இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும்.
காவிநிற ஆடையணியும் பக்தர்கள்
2023ம் ஆண்டின் சிவாலய ஓட்டம் நாளை(பிப்.,17) துவக்கம்
சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து ஓடியோடி இந்த தரிசனத்தை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள்.
இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்கள் காவி நிறத்தில் ஆடை அணிந்து, கையில் ஒரு பனை விசிறியும், மற்றொரு கையில் சின்ன பண முடிப்பும் வைத்து கொள்வார்களாம்.
இந்த பொருட்களை சுமந்து கொண்டு தான் அவர்கள் ஓடி ஓடி சிவனை தரிசனம் செய்கின்றனர்.
இப்படி ஓடி செல்லும் பக்தர்கள் கோயிலில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.
மேலும் பக்தர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சாமிக்கு விசிறிவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அதன் படி, இந்தாண்டுக்கான சிவாலய ஓட்டம் நாளை(பிப்.,17) துவங்கவுள்ளது.