தமிழகத்தில் இன்று முதல் 'சிங்கப்பெண்' அதிரடிப்படை: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10ஆம் தேதி பொறுப்பேற்ற போது,"பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதே அரசின் முதல் இலக்கு" எனக் கூறி, அதற்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பில் மேடையிலேயே கையெழுத்திட்டார். நிர்வாகக் காரணங்களால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, இன்று மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் இந்தச் சிறப்புப் படையைத் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.
கட்டமைப்பு
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பு: படையின் கட்டமைப்பு
பெண்களின் பாதுகாப்பை அதிவேகமாக உறுதி செய்யும் பொருட்டு, இந்தச் சிறப்பு அதிரடிப்படை நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பின் கீழ் செயல்பட உள்ளது. இத்துறையின் முதல் தலைமை அதிகாரியாக மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் முதற்கட்டமாக ஒரு எஸ்பி (SP), 2 டிஎஸ்பிக்கள் (DSP), 4 இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் (SI) மற்றும் சைபர் கிரைம், சமூக ஊடகப் பிரிவு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் என மொத்தம் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா!#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @tnpoliceoffl pic.twitter.com/9jq0MPHPI5
— TN DIPR (@TNDIPRNEWS) June 9, 2026
சீருடை
மாற்றப்பட்ட புதிய சீருடை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு எனத் தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஒரு பிரத்யேக அடையாள சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடிப்படையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் வழக்கமான காக்கிச் சட்டைக்கு மாற்றாக அடர் நீல நிறச் சட்டை மற்றும் காக்கி நிற பேண்ட் அணிவார்கள். இவர்களுடன் கருப்பு நிறத் தொப்பி, சட்டையில் 'சிங்கப்பெண் லோகோ' அடங்கிய பேட்ஜ் மற்றும் எடை குறைந்த கருப்பு நிற ஷூக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தனித்துவமான சீருடை, பொதுவெளியில் இவர்களை மக்கள் எளிதில் அடையாளம் காண உதவும்.
சிங்கப்பெண்
எப்படிச் செயல்படும் இந்த 'சிங்கப்பெண்' படை?
சென்னையில் இன்று இந்தத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 250 காவல் துறை உள்கோட்டங்களிலும் இந்தச் சிறப்பு அதிரடிப்படை விரிவுபடுத்தப்பட உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசரக் காலங்களில் அழைக்கும் 'டிஸ்ட்ரஸ் கால்களுக்கு' உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுத்தல், சைபர் குற்றங்களில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த மனநல மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற சவாலான பணிகளை இந்தச் சிங்கப்பெண் அதிரடிப்படை மேற்கொள்ளும்.