"இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் இந்து தர்மத்தை "வேண்டுமென்றே அவமதிப்பதாக" இன்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மதத்திற்கு எதிரான அவர்களின் ஒவ்வொரு கருத்தும் "நன்கு சிந்திக்கப்பட்டவை" என்று விமர்சித்துள்ளார். சேலத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, வரும் மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் ஒவ்வொரு வாக்கையும் பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறினார். "இண்டியா கூட்டணியினர் இந்து மதத்தை மீண்டும் மீண்டும், வேண்டுமென்றே அவமதிக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இந்து மதத்திற்கு எதிராக அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையும் மிக நன்றாக சிந்திக்கப்பட்டவை!" என்று பிரதமர் மோடி இன்று கூறினார்.
'வேறு எந்த மதத்தையும் எதிர்க்கட்சிகள் அவமதிப்பதில்லை": பிரதமர் மோடி
மேலும் பேசிய அவர், மற்ற மதங்களை இண்டியா கூட்டணியினர் விமர்சிப்பதில்லை என்றும் தெரிவித்தார். "திமுக மற்றும் காங்கிரஸின் இண்டியா கூட்டணி வேறு எந்த மதத்தையும் அவமதிப்பதில்லை. எந்த ஒரு மதத்திற்கும் எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆனால், இந்து மதம் என்று வந்தால், அதை அவமானப்படுத்துவற்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதில்லை." என்று மேலும் பிரதமர் மோடி தெரிவித்தார். ராகுல் காந்தி 'சக்தி' கருத்துக்கு பிரதமர் மோடி இன்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். "தேர்தல் பிரச்சாரத்தின் முதல் பேரணியின் போதே அவர்கள் 'சக்தி'யை அழிப்பது குறித்து பேசுகிறார்கள். 'சக்தி'க்கு எதிராக போராடுவது பற்றி அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்." என்று பிரதமர் இன்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி 'சக்தி' குறித்து பேசியது என்ன?
மும்பையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) தான் இந்த நாட்டின் சக்தி என்றும், அவை இல்லாமல் பிரதமர் மோடியால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும் கூறினார். "ஒரு சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அது என்ன சக்தி தெரியுமா? ராஜாவின்(பிரதமர் மோடி) ஆன்மாவே EVM என்ற சக்தியில் தான் உள்ளது." என்று பிரதமரை ராகுல் காந்தி அப்போது விமர்சித்தார். EVM மட்டுமல்லாமல், அமலாக்கத்துறை, CBI, மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் பிரதமரின் கைக்குள் இருப்பதாக நேற்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி இந்து மதத்தின் 'சக்தி'யை எதிர்த்து பேசுவதாக பிரதமர் மோடி ராகுல் காந்திக்குகண்டனம் தெரிவித்து வருகிறார்.