திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம்
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(ஜூலை 31) திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்-613 தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவிற்கு இன்று காலை 10:45 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இன்று மதியம் 12.03 மணிக்கு இந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த ஏர் இந்தியா விமானத்தில் 154 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.