
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன: டிரம்ப் புதிய கூற்று
செய்தி முன்னோட்டம்
மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலின் போது ஏழு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதோடு, போர் நிறுத்தம் தாம் நடத்திய மத்தியஸ்த முயற்சியின் விளைவாகத்தான் நடந்தது என கூறியுள்ளார். இதற்கு முந்தைய அறிக்கைகளில், ஐந்து விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த எண்ணிக்கை மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு, எந்த நாடு எத்தனை விமானங்களை வீழ்த்தியது என்பது குறித்து அவர் எவ்விதமான விளக்கமும் வழங்கவில்லை. எனினும், கடந்த வாரங்களில் இந்திய விமானப்படைத் தளபதி வெளியிட்ட தகவலின்படி, ஆபரேஷன் சிந்தூர் போது ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ஒரு AEW\&C விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
மத்தியஸ்தம்
அணு ஆயுதப் போரைத் தடுக்க மத்தியஸ்தம்
பாகிஸ்தானும் இந்தியாவும் "அணு ஆயுத நாடுகள்" என்பதைக் குறிப்பிடும் டிரம்ப், இருதரப்புகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு வர காரணம் தங்களின் வன்மையான வர்த்தக அழுத்தம் என கூறியுள்ளார். "நீங்கள் சண்டையை தொடர்ந்தால், நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்யமாட்டோம்... நீங்கள் 24 மணி நேரத்தில் தீர்மானிக்க வேண்டும்" என்று தான் கூறியதாகவும், பின்னர் இருதரப்புகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா, டிரம்பின் இந்தக் கூற்றை பலமுறை மறுத்துள்ளது. மே 10 அன்று இருநாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதை, "மூன்றாம் தரப்பு தலையீடு இன்றி இருதரப்புகளும் நேரடியாக முடிவெடுத்தவை" என கூறியுள்ளது.