கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, இடஒதுக்கீடு, உரிமைகள் உள்ளிட்ட சலுகைகள் அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும் கொடுக்க வேண்டும். அதற்காக அரசமைப்பு சட்டத்தில் உரியத்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(ஏப்ரல்.,19)சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார். இந்த தனி தீர்மானம் குறித்து பேசிய முதல்வர், ஆதிதிராவிடர்கள் மதம் மாறினாலும் அவர்கள் மீதான தீண்டாமை கொடுமை தொடருகிறது. வரலாற்று ரீதியாக ஆதி திராவிடர்களாக இருக்கும் போதே பட்டியலின வகுப்பிற்கான சலுகைகளை வழங்குவது தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தினை சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை, மதம் மாறுபவர்களுக்கு தர மறுப்பது சரியல்ல என்பதே இதன் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
கல்வி உதவித்தொகை வழங்கும் போது, இட ஒதுக்கீடு வழங்கக்கூடாதா?
தொடர்ந்து பேசிய அவர், சாதி என்பது சமூக கேடு. சாதிய ஏற்றத்தாழ்வினை வைத்து எந்த அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ அதனை கொண்டே அவர்களை உயர்வடைய செய்வது தான் சமூகநீதி தத்துவம் ஆகும். மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று சுட்டிக்காட்டி பேசினார். மேலும், மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் போது, இட ஒதுக்கீட்டினையும் வழங்குவது தான் சரியானதாக இருக்கும். சீக்கிய, பவுத்த மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.