'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு: தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர் 26 ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரைத்த 'சென்யார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரபு மொழியில் இதற்கு 'சிங்கம்' என்று பொருள்.
விடுமுறை
கடும் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதற்கிடையே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருவதால், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகை, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவம்பர் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்றவர்கள் இன்று கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.