LOADING...
செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 
செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 

எழுதியவர் Nivetha P
Nov 17, 2023
12:22 pm

செய்தி முன்னோட்டம்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி அவருக்கு இதயத்தில் அடைப்பு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பின் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததன் பேரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் அவர் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம்(நவ.,15)மாலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சிகிச்சை 

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் முடிவு 

இதன் காரணமாக அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை அங்குள்ள மருத்துவக்குழு பரிசோதித்த நிலையில், அன்று இரவே அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை இதயவியல் பிரிவு தலைமை மருத்துவரான மனோகரன் தலைமையிலான குழு பரிசோதித்து தீவிர சிகிச்சையளித்து வருகிறது. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் நிலையில், அதனை குறைக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் உணவு சாப்பிடும் முன்னர் செய்யவேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் அனைத்து பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவரது அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவெடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.