டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12ம்தேதி சுமார் 3,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கிடையில், சென்னை முதன்மை நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீடித்தது. அதன்படி அவருக்கு, 7வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று(அக்.,9) மாலை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
படுக்கையில் இருந்து கீழே விழுந்த செந்தில் பாலாஜி
இதனால் அவருக்கு உடனடியாக சிறையிலுள்ள மருத்துவமனை வளாகத்தில் வைத்து இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு வழக்கத்திற்கு மாறாக இதயத்துடிப்பு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே சிறையிலிருந்த செந்தில் பாலாஜி இன்று(அக்.,9)அதிகாலை 4.30 மணியளவில் படுக்கையில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் உடனே மருத்துவர்களை அணுகி அவரின் உடல்நிலையை கண்காணித்துள்ளனர். அதன் பின் அவரை பலத்த பாதுகாப்புடன் காலை 6.45மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று பிற்பகல் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.