Page Loader
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு 
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு

சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு 

எழுதியவர் Nivetha P
Aug 17, 2023
08:16 pm

செய்தி முன்னோட்டம்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கடந்த 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவருக்கு நீதிமன்ற காவலானது ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டதால், மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

விசாரணை 

ஆகஸ்ட் 28ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் மேற்கொண்ட விசாரணையின் முடிவில், அவர் மீதான 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கினை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் மீது தொடுக்கப்படும் வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் ஆகஸ்ட் 28ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.