செந்தில் பாலாஜி வழக்கு - புலன் விசாரணை குறித்து வாதம் செய்யும் அமலாக்கத்துறை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கினை தற்போது 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.வி.கார்த்திகேயன் கடந்த 2 நாட்களாக விசாரணை செய்து வருகிறார்.
அதன்படி நேற்று(ஜூலை.,11) நடந்த விசாரணையில் மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த விவகாரம் குறித்து விசாரணை செய்யமுடியுமே தவிர, புலன் விசாரணை செய்யமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, செந்தில் பாலாஜியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
வழக்கு
ஆதாரங்களை பட்டியலிட்ட அமலாக்கத்துறை
மேலும், தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் வாதாடினார்.
இதனை தொடர்ந்து தற்போது இவ்வழக்கின் 2வது நாள் விசாரணையானது இன்று(ஜூலை.,12) நடக்கிறது.
இதில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகியுள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் படி, விசாரணை மேற்கொள்வது அமலாக்கத்துறையின் கடமை" என்று வாதிட்டார்.
தொடர்ந்து, "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட பணத்தினை சோதனை செய்வது, முடக்குவது, குற்றத்தினை கண்டறிய குற்றம்சாட்டப்பட்டோரை விசாரிப்பது உள்ளிட்டவைகளை செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது"என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு குறித்த ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.