உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும், ரஷ்யா-உக்ரைன் போர் ஓயாமல் நடந்து கொண்டிருப்பது குறித்து விசாரிப்பதற்கும் பிரதமர் மோடி இன்று அந்த இரு தலைவர்களையும் தொடர்பு கொண்டார். இந்தியாவை சமாதானம் செய்யும் நாடாக ரஷ்யாவும் உக்ரைனும் பார்க்கிறது என்று இரு தலைவர்களும் இன்று கூறி இருக்கின்றனர். மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தங்கள் நாடுகளுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு இரு தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடைசியாக 2018ல் ரஷ்யா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதியான வகையில் தீர்வு காண அழைப்பு விடுத்தது இந்தியா
இந்தியா-உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி இன்று உக்ரைன் அதிபருடன் விவாதித்தார். மேலும் நாட்டின் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையையே நாம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த பிரச்சனையில் அமைதியான தீர்வு காண இந்தியா தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் தொடர்ந்து செய்யும் என்று பிரதமர் கூறியுள்ளார். இதற்கிடையில், உக்ரைன் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை செய்து வருவது குறித்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, இந்தியாவை பாராட்டினார். கடந்த ஆண்டு மே மாதம், ஜப்பான் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது, பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை சந்தித்தார்.