ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்
இந்திய நாட்டின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று அறிவித்து அதனை மேற்கொண்டு வருகிறார். தற்போது காஷ்மீரில் நடந்து வரும் இந்த யாத்திரை குடியரசு தின விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஜன.,27) பனிஹல் என்ற இடத்தில் இருந்து மீண்டும் துவங்கியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தியவாறு ராகுல் காந்தியோடு நடைபயனம் மேற்கொண்டனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ராகுல் காந்தி போல் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்துகொண்டு இதில் பங்கேற்றார். இவர்கள் காசிக்குண்ட் என்னும் இடத்தை அடைந்த பொழுது ராகுல்காந்தியின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் இருந்து காஷ்மீர் காவல்துறையினரை காணவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், தொடர்ந்து நடக்க முயன்ற ராகுல் காந்தியை அவரது பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அவர் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு, இரவு தங்க முடிவெடுத்த அனந்தநாக் மாவட்டம், கானாபாலுக்கு சென்றடைந்தார். நேற்று 11 கி.மீ., நடக்க திட்டமிட்டிருந்த நிலையில் வெறும் அரை கி.மீ., தூரத்திலேயே பாதுகாப்பு குளறுபடி காரணமாக யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை அவந்திபோரா என்னும் பகுதியில் இருந்து மீண்டும் யாத்திரை துவங்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் நடைபயண யாத்திரைக்கான பாதுகாப்பு விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜுனே கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.