ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, அதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில், "1 கிமீ யாத்திரை நடத்திய பிறகு நடைப்பயணத்தை நிறுத்துவது குறித்து, ஆர்கனைஸர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஆலோசிக்கவில்லை. பாதுகாப்புக் குறைபாடு எதுவும் கிடையாது. நாங்கள் அசைக்கமுடியாத பாதுகாப்பை வழங்கி இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளது. நேற்று(ஜன 27) ராகுல் காந்தி மற்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீர் போலீஸ் குறித்த குற்றசாட்டுகளை முன்வைத்ததை அடுத்து காவல்துறை ட்விட்டரில் பதிலளித்துள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக பாதுகாப்பு குறைபாடுகள் குற்றம் சாட்டப்பட்டன.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் ட்விட்டர் பதிவில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது
யாத்திரை செல்லும் பாதையில் ஆர்கனைஸர்களால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சோதனை செய்யப்பட்ட கூட்டத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பனிஹாலில் இருந்து பெரும் கூட்டம் நடைபயணத்தில் சேருவதைப் பற்றி ஆர்கனைஸர்கள் மற்றும் மேலாளர்கள் தெரியப்படுத்தவில்லை. 15 CAPFகள் மற்றும் 10 ஜேகேபியின் வீரர்கள் உட்பட முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1 கிமீ யாத்திரை நடத்திய பிறகு நடைப்பயணத்தை நிறுத்துவது குறித்து ஆர்கனைஸர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஆலோசிக்கவில்லை. மீதமுள்ள யாத்திரை அமைதியாக தொடர்ந்தது. பாதுகாப்புக் குறைபாடு எதுவும் கிடையாது. நாங்கள் அசைக்கமுடியாத பாதுகாப்பை வழங்கி இருக்கிறோம். என்று தெரிவித்திருக்கிறது.