ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்!
ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரைக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, மத்திய உள்துறை அமைச்சருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தது. இந்த கடிதத்திற்கு பதிலளித்த CRPF, "ராகுல் காந்திக்கான பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. ராகுல் காந்தி தான் பாதுகாப்பு விதிமுறைகளை 113 முறை மீறியுள்ளார்." என்று கூறியுள்ளது. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் பாரத் ஜடோ யாத்திரை என்ற நடைப்பயணத்தை ஆரம்பித்தார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடியும் இந்த நடைபயணம், 150 நாட்கள் நடக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. இன்று வரை, இந்த நடைபயணம் மூலம் 3000 கிலோ மீட்டர்களை ராகுல் காந்தி கடந்திருக்கிறார்.
பாதுகாப்பு விதிமுறை மீறல்?!
தற்போது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த யாத்திரை, அடுத்து மிகவும் பதற்றமான மாநிலங்களான ஜம்மு மற்றும் பஞ்சாபைக் கடந்து செல்கிறது. இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பு குறைவால் தொண்டர்களே இணைந்து ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி ராகுல் காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தனர். இதனால் நடைப்பயணத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுப்பிடி ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அவருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த CRPF, "ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் ஏற்படவில்லை. அவர் தான் 2020ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 113 முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளார்" என்று கூறியுள்ளது.