அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் நடத்தவுள்ளதை அடுத்து, டெல்லி முழுவதும் இன்று காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் "சர்வாதிகாரத்திற்கு" எதிராக மெழுகுவர்த்தி அணிவகுப்பையும் உருவபொம்மை எரிப்பையும் இன்று நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்தது. பாஜக தலைமையகம், ஐடிஓ மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் கூடும் வழிகளில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை ED கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தது.
பாஜகவால் திட்டமிடப்பட்ட அரசியல் சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
அவர் கைது செய்யப்பட்ட பின்னர், அவரை மார்ச் 28 வரை ஆறு நாட்கள் ED காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவால் திட்டமிடப்பட்ட "அரசியல் சதி" என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு முன்னதாக, டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். "ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் தலைவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அமைதி மற்றும் சமூக ஒழுங்கை நிலைநாட்ட, தேசிய தலைநகரில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.