இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை; அடுத்த புயலைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்குச் சொந்தமில்லாத ஐரோப்பியக் கருத்து என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கட்கிழமை (செப்டம்பர் 23) கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி திருவட்டாரில் நடைபெற்ற இந்து தர்ம வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கருத்து என்றும், இந்தியாவில் மதச்சார்பின்மை தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "ஐரோப்பாவில் சர்ச்சுக்கும் ராஜாவுக்கும் சண்டை நடந்ததால் மதச்சார்பின்மை வந்தது. இந்தியா தர்மத்திலிருந்து எப்படி விலகி இருக்கும்? மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கருத்து, அது அங்கு இருக்கட்டும். இந்தியாவில், மதச்சார்பின்மை தேவையில்லை." என ஆளுநர் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஆளுநரின் இந்த கருத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரின் கருத்துக்கு கண்டனம்
ஆளுநரின் கருத்துக்கு தமிழகத்தை ஆளும் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், "மதச்சார்பின்மை என்பது இந்தியாவில் மிகவும் தேவையான கருத்து, ஐரோப்பாவில் அல்ல. குறிப்பாக ஆளுநர், அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழியில் செல்லவில்லை. அவருக்குத் தெரியாத மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பிரிவு 25 கூறுகிறது. அவர் சென்று அரசியலமைப்பை முழுமையாக படிக்க வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இருபத்தி இரண்டு மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன." என்று தெரிவித்தார். திமுகவைப் போல், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் போன்றவையும் ஆளுநரின் மதச்சார்பின்மை கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன.