தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு மாநிலத்தில் இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது. முன்னதாக விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 1ம்தேதி திறக்கப்படும். அதே போல், 1 முதல் 5ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தாண்டு வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவு வாட்டி வதைத்து வருகிறது. மதியவேளையில் மக்கள் வெளியே வருவதை முடிந்தளவு தவிர்க்கவும் என்று அரசு சார்பில் அண்மையில் அறிவுறுத்தல்கள் வெளியானது. இதனையடுத்து, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாணவர்கள் நலன்கருதி, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உத்தரவினை மீறி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை
இந்நிலையில் அரசு உத்தரவினை மீறி, சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று(ஜூன்.,1) திறக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியானது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது, கோடை வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாகவே பள்ளிகளை திறக்கும் தேதியானது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளோம். இதற்கு முன்கூட்டி பள்ளிகள் திறக்கப்பட கூடாது. இதனை மீறி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்த பள்ளிகள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், சிபிஎஸ்சி பள்ளிகள் வேண்டுமானால் 10ம் வகுப்புக்கு மேல் திறக்கலாம். ஆனால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.