வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 18) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை
வானிலை நிலவரம்
தற்போது வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 22ஆம் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (நவம்பர் 18), கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் வரை உள்ள கடற்கரை மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.