பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநில கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பிரச்னைகளையும், கருத்துகளையும் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ்,"எங்கெல்லாம் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டுமோ, பொதுப்பணித் துறை செயலர் மூலமாக ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றோம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஒரு ஆப் உருவாக்கச் சொல்லியிருக்கிறோம். மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து தினசரி கண்காணிப்பதற்காக ஆப் உருவாக்கப்படவுள்ளது" என தெரிவித்தார்.
"தவறுகளை மூடி மறைக்காதீர்கள்":பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்
பள்ளி மாணவி பாலியல் விவகாரம் குறித்த கேள்விக்கு,"கிருஷ்ணகிரி விவகாரத்தில் ஏற்கனவே துறை சார்ந்து அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் நடக்காத வண்ணம் எங்களுடைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார். "பள்ளி நிர்வாகத்தினர் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்காதீர்கள். உடனடியாக எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே பெற்றவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும். தனியார், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறு தெரியவந்தாலும் உடனடியாக எங்கள் கவனத்திற்கோ, எஸ்.எம்.சி அல்லது பி.டி.ஏ அமைப்புக்கு தகவல் கொண்டு சென்று தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். இதனால் பள்ளி பெயர் கெட்டுப் போகாது." என்றார்.