கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு
திருவண்ணாமலை அருகே செல்லங்குப்பம் என்னும் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பொதுப்பிரிவினர், 200 குடும்பத்தார் பட்டியலினத்தினை சேர்ந்தவர்கள் என பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது, இந்த கோயிலுக்குள் பொது பிரிவினத்தினை சேர்ந்த குடும்பத்தார் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களாம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அக்கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் முகநூல் வாயிலாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் வன்முறை ஏற்பட்ட காரணத்தினால் காவல்துறை அந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
இந்த சம்பவத்தினையடுத்து தாங்களும் இந்த கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று பட்டியலினத்தினை சேர்ந்த மக்கள் போராட்டம் செய்தனர். அது மட்டுமில்லாமல், கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இன்று(ஆகஸ்ட்.,2) காலை காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் வன்முறை ஏதும் நடக்காமல் தடுக்கும் நோக்கில் வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்ட் கார்த்திகேயன் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.