ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி
ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பற்றிய அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றன. அதானி குழுமத்தின் பங்குகள் மளமளவென்று சரிந்து அவர் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து 27வது இடத்துக்கு சென்று விட்டார். அது மட்டுமல்லாமல், ஹிண்டரபர்க் அறிக்கை சார்ந்து பல விதமான பெட்டிஷன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புகார்களை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் புதிதாக ஒரு கமிட்டியை அமைக்க இருக்கிறது. இந்த கமிட்டிக்கு ஓய்வு பெற்ற நீதிபதியான திரு ஏ.எம் சாப்ரே அவர்கள் தலைமை வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிண்டரபர்க் அறிக்கை சார்ந்து மேற்கொள்ளப்படும் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதோடு மட்டுமல்லாமல், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களை பாதுகாப்பதற்காகவும் இந்த கமிட்டி செயல்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புகார்களை விசாரிக்க புதிய கமிட்டியின் உறுப்பினர் விவரங்கள்
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்திய முதலீட்டாளர்களை, பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்களில் இருந்து பாதுகாக்க, ஒழுங்குமுறை பொறிமுறையை வலுப்படுத்த வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க 17 பிப்ரவரி 2023 அன்று நீதிமன்றம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வின், புதிய கமிட்டியை உருவாக்கி, அதன் உறுப்பினர்களாக திரு ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவதத், திரு.நந்தன் நிலகேணி, திரு.கே.வி.காமத், திரு.சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோரை நியமித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த கமிட்டி இரண்டு மாதங்களுக்குள் தங்க தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.