மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்
பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு பல்வேறு நாடுகளிலும் வழங்க தொடங்கி இருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஒரு பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டிருந்தது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பு தொடர்பான விதிகளை உருவாக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட இந்த பொதுநல மனுவை(PIL) ஏற்க உச்சநீதிமன்றம் இன்று(பிப் 24) மறுத்துவிட்டது. மாதவிடாய் விடுப்பு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று வேலை வழங்குபவர்களுக்கு ஆணையிட்டால், அது பெண்களை பணியமர்த்துவதில் இருந்து அவர்களை தடுக்கும் என்று தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் கூறியுள்ளார். எனினும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் இது குறித்து மனுதாரர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாதவிடாய்க்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கும் தனியார் நிறுவனங்கள்
மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலியின் அளவு, மாரடைப்பின் போது ஒரு நபர் அனுபவிக்கும் வலிக்கு சமம் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதை மேற்கோள்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், சோமாடோ, பைஜூஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் மாதவிடாய்க்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குகிறது என்ற தகவலும் இந்த மனுவில் கூறப்பட்டிருந்து. இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் இதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தள்ளுபடி செய்துவிட்டனர். மேலும், சட்டப்பிரிவு 14இன் படி அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தையும் இது மீறுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.