மாதவிடாய் விடுப்பை அங்கீகரித்த ஸ்பெயின்
அதீத மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் சட்டமியற்றுபவர்கள் நேற்று(பிப் 16) இறுதி ஒப்புதல் அளித்துள்ளனர். இது போன்ற சட்டத்தை முன்னெடுத்த முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக 185 பேரும் எதிராக 154 பேரும் ஓட்டளித்திருந்ததை அடுத்து பெரும்பான்மையில் இது வென்றுள்ளது. ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் ஜாம்பியா போன்ற குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே மாதவிடாய் விடுப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. "இது பெண்ணிய முன்னேற்றத்திற்கான வரலாற்று நாள்" என்று அந்நாட்டின் சமத்துவ அமைச்சர் ஐரீன் மான்டெரோ வாக்கெடுப்புக்கு முன்னதாக ட்வீட் செய்திருந்தார்.
பிற உடல்நலக் கோளாறு போலவே மாதவிடாய்க்கும் விடுப்பு
இந்த சட்டத்தின் படி, மாதவிடாய் வலியால் சிரமப்படும் பெண்கள் அவர்களுக்கு வலி இருக்கும் வரை எத்தனை நாள் விடுப்பு வேண்டுமோ அத்தனை நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். 'சிக்' லீவாக(sick leave) இது கணக்கிடப்படாது. பிற உடல்நலக் குறைவிற்கு கொடுக்கப்படும் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் போலவே, இந்த மாதிரியான உடல்நல கோளாறும் அங்கீகரிக்க பட வேண்டும் என்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வலிமிகுந்த மாதவிடாய்க்கு அளிக்கப்படும் இந்த விடுப்பை எத்தனை நாட்களுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்த சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் மாதவிடாய் விடுப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு போடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.