மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
இந்தியா முழுவதும் உள்ள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரி ஒரு பொது நல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலியின் அளவு, மாரடைப்பின் போது ஒரு நபர் அனுபவிக்கும் வலிக்கு சமம் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதை மேற்கோள்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சோமாடோ, பைஜூஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் மாதவிடாய்க்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குகிறது என்ற தகவலும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொதுநல மனுவின் சாராம்சம்
சில மாநிலங்களில் மாதவிடாய் வலிக்கான விடுப்புகளும் சலுகைகளும் வழங்கப்பட்டாலும் நிறைய மாநிலங்களில் மாதவிடாய்க்கான எந்த ஒரு சலுகைகளும் வழங்கப்படவில்லை. "இந்தச் சட்டம் பெண்களை கூட்டாட்சி மற்றும் மாநிலக் கொள்கைகளின் பெயரில் வேறுபடுத்துவதால், இது சட்டவிதி 14 இன் மீறலாகும். பெண்கள் மாதவிடாயின் போது இதேபோன்ற உடலியல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அவர்கள் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள். குடியுரிமை கொண்ட பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்." என்று இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.