ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். அதோடு, ஆலையை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அங்கிருந்த மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22-ஆம் தேதி, இந்த போராட்டம் வன்முறையாக வெடிக்க, போலீசார் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மே 28-ஆம் தேதி மூடப்பட்டு, தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உதவியை நாடிய வேதாந்தா
மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி, ஸ்டெர்லைட் அலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது வேதாந்தா நிறுவனம். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மாசு மற்றும் தாமிரக்கழிவுகளை கையாண்ட விதம் மிகவும் கவலைக்குரியது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது". "இந்த வழக்கை திறம்படவிசாரித்த சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம்'' என தெரிவித்துள்ளனர்.