ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திரையிடுதலை நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும் இது சார்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட முடிவுகளின் தரவை பராமரிக்குமாறும் மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும், இந்த விழாவை காட்சிப்படுத்தவோ, சிறப்பு பூஜைகள் அல்லது பஜனைகள் நடத்தவோ தடை இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
நேரலை ஒளிபரப்புக்கு போலீஸார் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட்
மறுபுறம், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இது போன்றதொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், அயோத்தி செல்ல இயலாத பக்தர்களுக்காக பஜனை, அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில், அனுமதி பெறவில்லை எனக் கூறி, நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீஸார் அனுமதி தேவையில்லை என உத்தரவிடப்பட்டது.