பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, மேல்முறையீடு செய்து சிறை செல்வதிலிருந்து விலக்கு பெற்றார். இதற்கிடையே, வழக்கின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அபய்.எஸ்.ஓஹா, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மார்ச் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். விசாரணையின் போது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "பொன்முடி அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதி மறுப்பு
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, "தண்டனையை நிறுத்தி வைக்கப் போவதில்லை. முதலில் லஞ்ச ஒழிப்புத் துறை இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி. கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிம வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.