உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சனாதன கொள்கை மீதான உதயநிதியின் கருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கினை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம்,"நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது. ஒரு அமைச்சர். உங்களது பேச்சினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்"எனத்தெரிவித்தது.
"நீங்கள் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். பிறகு தற்போது பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறீர்கள்"எனத்தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த உதயநிதி தரப்பு,"சனாதனம் தர்மம் தொடர்பான வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை; மாறாக அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்" என கூறப்பட்டது.
வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
சனாதன தர்மம்
சர்ச்சையை ஈர்த்த உதயநிதியின் கருத்து
சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்" என்று பேசினார்.
இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் மீது, இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
கூடவே, நாடு முழுவதும் பல இடங்களில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை தான் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.