
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) இன்று விசாரித்துள்ளது. விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தவெக உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
விவாதங்கள்
உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள்
இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்: தவெக தரப்பில்: போலீஸ் அறிவுறுத்தல்படியே கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார். விஜய் அங்கேயே இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகியிருக்கும் எனப் போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசுத் தரப்பு கூறுவது முற்றிலும் தவறானது என்றனர். தமிழக அரசு தரப்பில், சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பலியானோர் தரப்பில், கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் எனக்கூறப்பட்டது. அதோடு, ஜனவரியில் அதே இடத்தில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஆனால் செப்டம்பரில் விஜய்யின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதோடு, காவல்துறை விசாரணையில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை இல்லை, எனவே சிபிஐ விசாரணை தேவை எனக்கூறப்பட்டது.
உத்தரவு
உச்ச நீதிமன்றத்தின் கேள்வி மற்றும் உத்தரவு:
சென்னை உயர் நீதிமன்றம், அதன் வரம்புக்குள் வராத ஒரு வழக்கை விசாரித்தது ஏன் என்றும், ஒரு கோரிக்கையை முன்வைத்தால் மற்றொரு கோரிக்கை மீது உத்தரவு பிறப்பித்தது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவாதங்களைத் தொடர்ந்து, விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.