LOADING...
தேர்தல் களத்தில் 'சின்னம்மா', TVK உடன் பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ்: நான்குமுனைப் போட்டியாக மாறும் தமிழக தேர்தல்
இடப்பகிர்வு மோதல்கள் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளன (pc: dailythanthi)

தேர்தல் களத்தில் 'சின்னம்மா', TVK உடன் பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ்: நான்குமுனைப் போட்டியாக மாறும் தமிழக தேர்தல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
06:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு மற்றும் பிரதான கட்சிகளுக்கு இடையே நிலவும் இடப்பகிர்வு மோதல்கள் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நேற்று, ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா, விரைவில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவங்கள் பொறித்த கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற மூவர்ணக் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். சசிகலாவின் வருகை, ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) என முக்கோணப் போட்டியாக இருந்த களத்தை, இப்போது நான்குமுனை போட்டியாக மாற்றியுள்ளது.

கூட்டணி

காங்கிரஸ் - திமுக கூட்டணி இழுபறி

மற்றொருபுறம், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே இடப்பகிர்வு பேச்சுவார்த்தைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "திமுக இன்னும் எங்களை அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. கடைசி நேரத்தில் எங்களை ஓரங்கட்டி, அவர்கள் கொடுக்கும் இடங்களை ஏற்க வைப்பதைத் தவிர்க்கவே முன்கூட்டியே பேச்சுவார்த்தையைத் தொடங்க விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வுக்கு திமுக கொள்கை அளவில் சம்மதித்துள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விஜய்யின் கட்சி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாகவும், அவர்கள் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் சோடங்கர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியலின் தற்போதைய சூழலில், கூட்டணிகள் மாறுமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

Advertisement