பாஜகவில், தன்னுடைய கட்சியை இணைத்தது ஏன் என்பது குறித்து சரத்குமார் விளக்க அறிக்கை
செய்தி முன்னோட்டம்
நேற்று சரத்குமார் தன்னுடைய ச.ம.க கட்சியை, பாஜக-உடன் இணைத்தார்.
இது குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு விதமாக செய்திகள் வெளியாயின.
அதோடு கட்சியில் சிலரும், இந்த முடிவு பற்றி அதிருப்தி தெரிவித்து இருப்பதாக செய்தி வரவே, இது பற்றி விரிவான தன்னிலை விளக்கம் ஒன்றை தந்துள்ளார் சரத்குமார்.
அந்த அறிக்கையில்,"1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம். அரசியல் அனுபவம் அதிகம் இருந்த போதும், அன்று நான் கொடுத்த ஒற்றை அறிக்கை, திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது".
சரத்குமார்
சரத்தின் அறிக்கை
"அதன் பிறகு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம், அரசியல் அணுகுமுறை இவை அனைத்தும் கலைஞர் அவர்களுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன்".
"அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்".
"அறிவும், ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர், புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள்". "அதன் பிறகு 2007 - ஆகஸ்ட் 31 இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம்"
பாஜவுடன் இணைப்பு
பாஜவுடன் திடீர் இணைப்பு ஏன்?
"ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த பாராளுமன்றத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம்".
"காரணம் தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது".
"என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்".