அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும்
செய்தி முன்னோட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா(102) காலமானார்.
கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது இறுதி சடங்குகள் நாளை நடக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(நவ.,15) காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மரணம்
சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதனைத்தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு தியாகராய நகரிலுள்ள மார்க்சிஸ்ட் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், அவரது இறுதி சடங்குகள் நாளை(நவ.,16) மார்க்சிஸ்ட் அகில இந்திய கட்சியின் தலைவர்கள் பங்கேற்க காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனையொட்டி அடுத்த ஒருவார கால கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதோடு, கட்சி கிளை அலுவலகங்கள் அனைத்திலும் அரைக்கம்பத்தில் கொடியினை பறக்கவிட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சங்கரய்யா மரணச்செய்தியினை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனை சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
மறைந்த சங்கரய்யாவின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் .