சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு
தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதல் படி, தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் தொடர்பாகவும், ஞாயிறு கிராமத்தில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு புதிய திருக்கோயில் கட்டுவது தொடர்பாகவும் கள ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைப்பு நிதியில் இருந்து நிதி எதுவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் தகவல்
அதன்படி அவர் பேசுகையில், சமயபுரம் அருள்மிகு திருக்கோயிலின் வைப்பு நிதி 2018ம் ஆண்டின் படி ரூ.13 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை ரூ.9 கோடியே 80 லட்சம் அளவில் பண பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கோயிலின் வைப்பு நிதியானது 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.458 கோடி நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான வைப்பு நிதி ரூ.556.39 ஆக உள்ளது. இதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கூடுதலாக ரூ.98.39 கோடி வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து பெருந்திட்ட வரைவிற்கு நிதி எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.