சதய விழா ஸ்பெஷல்: அண்ணன் அதித்த கரிகாலனின் கொலையாளிகளை கண்டறிந்து நீதி வழங்கிய ராஜ ராஜ சோழர்
பொன்னியின் செல்வாராம், ராஜராஜ சோழருக்கு இந்த மாதம் சதயவிழா கொண்டாடப்படவுள்ளது. அதாவது அவருடைய பிறந்தநாள் விழா. இந்த நாளில், ராஜராஜ சோழரின் பெருமைகளை பேசும் பல கட்டுரைகளை நாங்கள் வழங்கி வருகிறோம். அந்த வகையில், ராஜராஜ சோழன் சிறந்த ஆட்சியாளர் என்பதையும் தாண்டி, அவர் அன்பான சகோதரன் என்பதற்கு சான்றாக ஒரு நிகழ்வையும் இங்கே பார்க்கலாம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவருக்கும், வரலாற்று ஆர்வலருக்கும் அறிந்த ஒரு செய்தி, பொன்னியின் செல்வரின் மூத்த சகோதரர் இளவரசர் ஆதித்த கரிகாலன் என்பதே. ஆதித்தன் முடிசூட்டு இளவரசனாக பதவியேற்ற சில மாதங்களிலேயே சதியால் கொலை செய்யப்பட்டார்.
சதியால் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன்
புதுக்கோட்டை அருகே உள்ள சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன் வீரத்துடன் போர் புரிந்து, வீரபாண்டியன் தலைகொண்டதாகவும், அந்த தலையை கொய்து தஞ்சை நுழைவு வாயிலில் பொதுவெளியில் வைத்ததாகவும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. இந்த கொலைக்கு பழிவாங்க, பாண்டியன் ஆபத்துதவிகள் சோழ ராஜ்யத்தில் ஊடுருவி ஆதித்தனை கொலை செய்தனர். உடையார்குடி கல்வெட்டில் இவ்விளவரசனைக் கொன்றோர் யார் என்பதை உணர்துகிறது. அவர்கள் சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்பவர்கள். அவர்கள் நால்வரும் உடன்பிறந்தோர் என்பதும் அக்கல்வெட்டில் அறியமுடிகிறது. அவர்களுள் இருவர், 'பிரமாதிராஜன்' என்ற உயர் பட்டங்களை பெற்றிருப்பதால் அவர்கள் அரசாங்க பதவியில் இருந்த அந்தணர் எனவும் கூறப்படுகிறது.
கொலைக்கு நீதி வழங்கிய அருள்மொழி தேவர்
சுந்தர சோழருக்கு பின்னர் அரியணை ஏறிய உத்தம சோழர் இந்த வழக்கினை விசாரித்தாரா என்பது குறித்து தெரியவில்லை. எனினும், மன்னார்குடிக்கு அருகிலுள்ள உடையார்குடி சிவன் கோவில் கருவறையின் மேற்குப் புறத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சாசனத்தில் ஆதித்த கரிகாலன் கொலைக்கு தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது. இது ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அண்ணனின் கொலைக்கு காரணமானவர்களை அவர் தண்டித்ததாக தெரியவருகிறது. இருப்பினும் கொலையாளிகள் சதிக்கு பின்னர், சோழ தேசத்தில் தங்க இருக்க மாட்டார்கள் எனவும், அதனால் அவர்களது சொத்துக்கள் மற்றும் அவர்களின் பந்துக்களின் சொத்துக்கள் அனைத்துமே பறிமுதல் செய்துள்ளார்.
செப்பேட்டில் காணப்படும் வரிகள்
"பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்... றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம்" என்கிறது இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி.