20 ஆண்டு கால திருமண உறவை முறித்து கொண்டார் சச்சின் பைலட்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட், சாரா அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற செய்தி அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டும், சாரா அப்துல்லாவும் சுமார் இரண்டு தசாப்த காலத்திற்கு பிறகு பிரிந்துள்ளனர். இந்த மாதம் ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சச்சின் பைலட் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், மனைவியின் விவரங்களை நிரப்பும் இடத்தில் "விவாகரத்து" என்று குறிப்பிட்டுள்ளளார். சாரா அப்துல்லா என்பவர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவின் மகள் ஆவார். எனவே, இருபெரும் முக்கிய புள்ளிகள் விவாகரத்து பெற்றிருக்கும் விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது இரு மகன்களும் சச்சின் பைலட்டின் பராமரிப்பில் உள்ளனர்
சச்சின் பைலட் மற்றும் சாரா அப்துல்லா பைலட் ஆகியோர் 2004 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆரன் மற்றும் வெஹான் என இரண்டு மகன்கள் உள்ளனர். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், சச்சின் பைலட் தனது மகன்கள் இருவரும் தனது பராமரிப்பில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் சச்சின் பைலட்டின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பதையும் அவரது தேர்தல் பிரமாணப் பத்திரம் காட்டுகிறது. 2018 ஆம் ஆண்டில், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.3.8 கோடியாக இருந்த நிலையில், 2023ல், அது 7.5 கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது.