Page Loader
சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?

சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?

எழுதியவர் Srinath r
Dec 15, 2023
06:21 pm

செய்தி முன்னோட்டம்

கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் அங்கு கூடி வருகின்றனர். இதனால் மக்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய 20 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், சபரிமலையில் உண்மையாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதா, இல்லை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளா அரசு தோல்வி அடைந்து விட்டதா? உண்மையில் சபரிமலையில் என்ன நடக்கிறது?

2nd card

சபரிமலையில் பின்பற்றப்படும் திருப்பதி முறை

திருப்பதி கோவிலில் பின்பற்றுவது போல, 'டைனமிக் க்யூ' முறை, சபரிமலையிலும் கேரளா அரசால் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மரகூட்டத்தில் இருந்து சன்னிதானம் வரையில், டைனமிக் க்யூ வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசன நேரத்தில் மாற்றம், வாகனங்களுக்கு கோவிலில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அனுமதி மறுப்பு, உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், டைனமிக் க்யூ முறையின் மூலம், தரிசனத்திற்கான நேரம் அதிகரித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு தோல்வி அடைந்துள்ளதாக பக்தர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

3rd card

சபரிமலையின் தற்போதைய நிலை குறித்து பக்தர்கள் என்ன சொல்கிறார்கள்?

சபரிமலையில் உள்ள கூட்ட நெரிசல் குறித்து தரிசனம் முடித்து வந்த சில பக்தர்கள் பிபிசி தமிழிடம், கேரளா அரசின் இந்த புதிய விதிமுறைகள் சிக்கல்களை உண்டாக்கி, தரிசன நேரத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். நிலக்கல் பகுதியில் இருந்து சொந்த வாகனத்தில் பம்பைக்கு செல்வதை கேரளா அரசு தடை செய்துள்ளதாலும், இரவு 10 மணிக்கு மேல் கேரள அரசு பேருந்துகள் பம்பைக்கு இயக்கப்படுவதில்லை என்பதாலும், பத்து மணி நேரத்திற்கு மேல் வீணாவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். டைனமிக் க்யூ முறையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், அதில் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக, மற்றொரு பக்தர் தெரிவித்ததாக பிபிசி தமிழ் கூறுகிறது.

4th card

அரசியலாக்கப்படும் சபரிமலை விவகாரம்?

கேரளா அரசின் இந்த புதிய நடைமுறைகளால் சபரிமலையில் கூட்டம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ள நிலையில், கேரள எதிர்க்கட்சிகளும் அரசையே குற்றம் சாட்டுகின்றனர். டிசம்பர் 10ம் தேதி, வரிசையில் நின்றபோது உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த சிறுமியும், தொலைந்து போன தந்தையை தேடி அழும் சிறுவனின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக, இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். வழக்கமாக அனைத்து துறைகளையும் கூட்டி நடத்தப்படும் ஆலோசனை கூட்டம், இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என காங்கிரஸ் கூறுகிறது. இந்துக்களுக்கு எதிரான அரசு, பக்தர்களை வஞ்சிப்பதாக கேரள பாஜக, அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளது.

5th card

அரசு தரப்பு விளக்கம் என்ன?

எதிர்க்கட்சிகள் மற்றும் பக்தர்களின் புகார்கள் குறித்து பேசியுள்ள கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வரை, பாதுகாப்பாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சபரிமலை குறித்த பொய்யான வீடியோக்களை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பரப்பி, அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய அமைச்சர், சபரிமலையில் அரசின் புதிய தோல்வி அடையவில்லை எனவும், அங்கு அனைத்தும் சரியாக உள்ளது என கூறியிருந்தார்.