சபரிமலை மண்டல கால பூஜைகள் கோலாகலத் துவக்கம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
செய்தி முன்னோட்டம்
கார்த்திகை மாதப் பிறப்பான இன்று முதல், ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரைக்கான மண்டல கால பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷங்கள் முழங்க கோலாகலமாக துவங்கியது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல காலத்துக்காக, நேற்று (நவம்பர் 16) மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி மகேஷ் மோகனரரு முன்னிலையில் முக்கிய சடங்குகள் நடைபெற்றன. கோயிலின் முக்கிய சடங்குகளுக்குப் பின், சபரிமலை மேல் சாந்தியாக பிரசாத் நம்பூதிரியும், மாளிகைப்புறம் மேல் சாந்தியாக மனு நம்பூதிரியும் பொறுப்பேற்றனர். இன்று அதிகாலை 3:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையைத் திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைகள் முறையாகத் துவங்கியது.
அட்டவணை
தினசரி பூஜை அட்டவணை மற்றும் அனுமதி விவரம்
வரும் டிசம்பர் 27 வரை, நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உச்ச பூஜை உள்ளிட்ட சடங்குகள் தினசரி நடைபெறும். தினசரி, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கும், தொடர்ந்து, அதிகாலை 3:30 முதல் காலை 11:30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். பின்னர், மதியம் 12:30 மணிக்கு உச்சி பூஜை நடைபெறும். பின்னர் மதியம் 1:00 மணிக்கு பகல் நடை அடைப்பு நடக்கும். மீண்டும் நடை திறப்பு மதியம் 3:00 மணிக்கு நடக்கும், தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு நடை சாத்தப்படும். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பக்தர்களும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.