பாகிஸ்தான் ஜெட்களை வீழ்த்திய நாயகன்: குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்கும் S-400 ஏவுகணை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அணிவகுப்பில், கடந்த ஆண்டு பாகிஸ்தானுடனான மோதலின் போது (ஆபரேஷன் சிந்தூர்) இந்தியாவை பாதுகாத்த S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை S-400 ஏவுகணை அமைப்பு சுட்டு வீழ்த்தி சாதனை படைத்தது. இந்த வீரத்தையும், முப்படைகளின் ஒருங்கிணைப்பையும் பறைசாற்றும் வகையில், ராணுவ விவகாரங்கள் துறை இந்த ஆண்டு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற கருப்பொருளில் அலங்கார ஊர்தியை அணிவகுக்க செய்கிறது.
சிறப்பம்சங்கள்
அணிவகுப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் பங்களிப்பு
இந்த ஆண்டு அணிவகுப்பில் மொத்தம் 6,050 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். S-400 ஏவுகணையுடன், பைரவ், சக்திபாண், யுஜிவி (UGV) மற்றும் ஏடிஏஜிஎஸ் (ATAGS) போன்ற நவீன ராணுவ தளவாடங்களும் இடம்பெறுகின்றன. மொத்தம் 30 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன. இதில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகளும், 13 அமைச்சகங்களின் ஊர்திகளும் அடங்கும். 'சுதந்திரத்தின் மந்திரம்: வந்தே மாதரம்' மற்றும் 'வளத்தின் மந்திரம்: தற்சார்பு இந்தியா' ஆகிய கருப்பொருள்களின் கீழ் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசியப் பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையிலும் இந்த ஆண்டு அணிவகுப்பு அமையவுள்ளது.