3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக மூன்று பேர் மீது கனேடிய போலீசார் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளனர். சந்தேக நபர்களுக்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். சந்தேக நபர்கள் ஒருவித கும்பல் பின்னணியைக் கொண்ட இந்தியர்கள் என்று தெரிகிறது... காவல்துறை எங்களுக்கு தகவல் சொல்லும் வரை நாங்கள் காத்திருப்போம்" என்றார்.
கனேடிய அதிகாரிகள் தகவல் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்: சஞ்சய் வர்மா
கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் குறித்து கனேடிய அதிகாரிகளிடம் இருந்து தொடர்ந்து அறிவிப்புகளைப் பெறுவோம் என்று நம்புகிறோம் என்று கனடாவுக்கான இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா தெரிவித்தார். "சம்பந்தப்பட்ட கனேடிய சட்ட அமலாக்க முகவர்களால் நடத்தப்பட்ட விசாரணைகளின் விளைவாக இந்த கைதுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த பிரச்சினை கனடாவிற்கு உள்பட்டது, எனவே இது தொடர்பாக எங்களிடம் எந்த கருத்தும் இல்லை" என்று சஞ்சய் வர்மா மேலும் கூறியுள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொலை செய்ததில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சிதைந்தன.