
RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!
செய்தி முன்னோட்டம்
கல்வி உரிமை சட்டம் (RTE) 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் மற்றும் சேர்க்கைக்காக காத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அறிவிப்பு
தமிழக அரசின் புதிய அறிவிப்பு என்ன?
பொதுவாக, RTE திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதமே சேர்க்கை அறிவிக்கப்பட்டு, புதிதாக 25% மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்படும். ஆனால், இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடைமுறை இன்னும் தொடங்காத நிலையில், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வழக்கத்திற்கு மாறாக உள்ளது. புதிய அறிவிப்பின்படி, கூடுதலாக புதிய மாணவர்களை சேர்ப்பதற்கு பதிலாக தற்போது அந்தந்த தனியார் பள்ளிகளில் பணம் செலுத்திப் படித்து வரும் மாணவர்களில் 25% பேரை RTE திட்டத்தின் கீழ் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றம்
பரிந்துரைக்கப்பட்ட மாற்றம்
பள்ளிகள் தங்கள் 'Regular' மாணவர்களில் 25% பேரை RTE திட்டத்தின் கீழ் மாற்றி, அவர்களுக்குப் பெற்றோர் செலுத்திய கட்டணத்தை திரும்ப அளித்துவிட வேண்டும். இவ்வாறு RTE-க்கு மாற்றப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு பின்னாளில் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது வழங்கும் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று தனியார் பள்ளிகள் கவலை தெரிவிக்கின்றன. அரசின் இந்த அறிவிப்பால் RTE சேர்க்கைக்காகக் காத்திருந்த சுமார் 75,000 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு "தண்டனை" போலவே பார்க்கப்படுகிறது என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.