கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம்
பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக சென்னை வந்து, தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஒட்டி வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வங்கி கணக்கிற்கு கடந்த 9ம் தேதி மாலை 3 மணியளவில் ரூ.9,000 கோடி க்ரெடிட் ஆகியுள்ளது. முதலில் இதற்கான மெசேஜை பார்த்த அவர், தனது அக்கவுண்டில் வெறும் ரூ.15தான் இருந்தது என்றும், இது மோசடி மெசேஜாக இருக்கும் என்றும் எண்ணியுள்ளார்.
தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.9,000 கோடி
ஆனால் பின்னர் மொபைல் போனில் தனது வங்கி ஆப்பில் அவர் செக் செய்து பார்த்ததில் அந்த மெசேஜ் உண்மையானது என்று தெரியவந்துள்ளது. எனினும் இதனை பரிசோதிக்க தனது நண்பருக்கு ரூ.21,000 பணம் அனுப்பி பார்த்துள்ளார். இந்த பணப்பரிமாற்றம் செய்த சில நிமிடங்களிலேயே அவரது அக்கவுண்டில் இருந்த அனைத்து பணமும் வங்கி திரும்பப்பெற்றுள்ளது. அதன்பின்னர் தூத்துக்குடியிலுள்ள டிஎம்பி வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை அழைத்து தவறுதலாக அவரது அக்கவுண்டில் ரூ.9,000 கோடி டெபாசிட் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், வங்கி கணக்கில் ஷேர் செய்த பணத்தினை செலவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர்கள், சென்னையில் உள்ள டிஎம்பி வங்கிக்கு நேரில் வருமாறு அழைத்துள்ளனர்.
காவல்நிலையம் செல்லாமல் சமரசம் பேசிய வங்கி
அதன்பின்னர் நேரில் சென்ற அவர், இவ்வளவு பெரிய தொகை எனது அக்கவுண்டிற்கு வந்துள்ளதால் பின்னாடி தனக்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அதனால் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் ஒன்றை தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை திநகர் வங்கி கிளை சார்பில் ஓர் வழக்கறிஞரும், ராஜ்குமார் சார்பில் ஓர் வழக்கறிஞரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி பண பரிமாற்றம் செய்த அந்த ரூ.21,000 ராஜ்குமார் திருப்பி செலுத்த வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு வங்கி சார்பில் வாகனக் கடன் அளிக்கப்படும் என்று சமரசம் பேசப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்
இந்த விவகாரம் குறித்து பெருமளவில் பேச்சுக்கள் உலா வர துவங்கியதால் தற்போது வங்கி சார்பில் ஓர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இது எழுத்தர் பிழை. வங்கிக் கணக்கு எழுத வேண்டிய இடத்தில் பணத் தொகையையும், பணத்தின் தொகை குறித்த விவரங்கள் நிரப்ப வேண்டிய இடத்தில், வங்கி கணக்கையும் எழுதியதால் தான் இந்த குளறுபடி நடந்துள்ளது என்று வங்கி கூறியுள்ளது.
யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல்
மேலும், எழுத்தரின் இந்த பிழையால் வங்கிக்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இது கிளரிக்கள் பிழை அதாவது எழுத்தர் பிழை என்பதால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் டிஎம்.பி வங்கி தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் டெபாசிட் செய்த 30 நிமிடங்களிலேயே மீண்டும் வங்கி கணக்கிற்கு அந்த பணம் வந்து விட்டது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.