மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்
மதுரையில் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் முதல் சர்வேயர் காலனி, நாலுமாவடி, அய்யர் பங்களா, உச்சப்பரம்பு மேடு, முதல் ஆணையூர் வரை 5 கிமீ., தொலைவிற்கு செல்லும் மாநகர நெடுஞ்சாலைத்துறை சாலை ஒன்று உள்ளது. இது மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தையும், திண்டுக்கல் செல்லும் மதுரை பைபாஸ் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். நெடுஞ்சாலை துறையோ இச்சாலையினை 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.80 செலவில் அமைத்தனர். இந்த சாலை போடப்பட்டு ஓர் ஆண்டிற்குள் மாநகராட்சி பாதாள சாக்கடை, பெரியார் கூட்டுகுடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டி குழாய்களை பதித்ததாக கூறப்படுகிறது.
மாநகராட்சி என்.ஓ.சி. கொடுக்காத காரணத்தினால் புதிய சாலை அமைக்காத நெடுஞ்சாலைத்துறை
இந்நிலையில் நெடுஞ்சாலை துறைக்கும் மாநகராட்சிக்கும் இடையே சரியான திட்டமிடுதல், ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால் இந்த சாலை போடப்பட்டு 6 மாதங்களில் பாழ்படுத்தப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் மாநகராட்சி தோண்டிய குழிகளை சரியாக மூடாமல் விட்டு சென்ற காரணத்தினால் 5 கிமீ., தூரத்திற்கு போடப்பட்ட சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. பிரமாண்டமான சாலையாக இருந்தாலும் வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 80 கோடி செலவில் போடப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழான நிலையில் மாநகராட்சி என்.ஓ.சி. கொடுக்காத காரணத்தினால் புதிய சாலையையும் நெடுஞ்சாலைத்துறை போடாததால் அப்பகுதி மக்கள் திருப்தியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.