தீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை என தகவல்
கடந்த ஞாயிற்றுகிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஒருபுறம் வெடிகளும், மத்தாப்புகளும் வெடிக்கப்பட்டு, நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், இந்த வெடிகளை நம்பி இருக்கும் சிவகாசி தொழிலாளர்கள், ரூ.6ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். நாட்டின் பட்டாசு தயாரிப்பில் 95%க்கு மேல் சிவகாசியிலிருந்துதான் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிப்பதாக கூறப்பட்டாலும், உரிமம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக, பட்டாசு உற்பத்தியாளர்கள் ஒருசாரார் வருத்தம் தெரிவித்துள்ளனர். பேரியம் நைட்ரேட் தடை, சரவெடிக்கு தடை என பல தடைகள் விதிக்கப்பட்டதால் சென்ற ஆண்டை விட இந்தாண்டு 10% உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.