காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது
கடந்த புதன்கிழமை முதல், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில், பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்(BDPL) என்ற மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி தீரஜ் சாஹுவின் குடும்ப உறுப்பினர்கள் தான் ஒடிசாவை தளமாகக் கொண்ட இந்த பெரிய மதுபான உற்பத்தி தொழிலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்பி தீரஜ் சாஹுவின் மகன் ரித்தேஷ் சாஹு தான் BDPLஇன் நிர்வாக இயக்குநராக உள்ளார். அவரது மூத்த சகோதரர், உதய் சங்கர் பிரசாத், BDPL நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஒடிசா,ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்ட வாய்ப்பு
இதுவரை 300 கோடி ரூபாய் எண்ணப்பட்டுள்ளது. மேலும், பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், BDPL நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை வரலாற்றில் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் இதுவரை 30க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிற வங்கிகளின் ஊழியர்களும் இந்த பணத்தை எண்ணும் பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பணத்தை எண்ணும் பணியை துரிதப்படுத்த 40 பெரிய மற்றும் சிறிய நோட்டு எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.