கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வண்டலூர் பகுதியினை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன புதிய பேருந்து நிலையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30ம் தேதி திறந்து வைத்தார். தற்போது இப்பேருந்து நிலையம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள பட்சத்தில், சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பேருந்து நிலையம் செல்ல ஏதுவாக கூடுதலான இணைப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
3 நடைமேடைகள் கொண்டு கட்டப்படவுள்ள ரயில் நிலையம்
இதற்கிடையே முன்னதாக, தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான வழித்தடத்தில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகேயே புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென பலதரப்பிலிருந்து கோரப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் கிளாம்பாக்கம் அருகே, வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயில் நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ.)சார்பில் ரூ.20 கோடி நிதி முதற்கட்டமாக தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிதியை தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைத்துள்ள சி.எம்.டி.ஏ. இதற்கான கட்டுமானப்பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதன்படி இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு மின்சார ரயில்கள் நின்று செல்லும் வண்ணம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.