வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு
2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள்: மதுரை சந்திப்பில்- 176 பேர்(153 சிறுவர்கள், 23 சிறுமிகள்) ராமேஸ்வரம்- 21 பேர்(17 சிறுவர்கள், 4 சிறுமிகள்) திருநெல்வேலி- 9 பேர் (5 சிறுவர்கள் , 4 சிறுமிகள்) செங்கோட்டை- 9 பேர்(8 சிறுவர்கள், 1 சிறுமி) திண்டுக்கல்- 6 பேர்(4 சிறுவர்கள், 2 சிறுமிகள்) தூத்துக்குடி- 6 சிறுவர்கள் விருதுநகர்-4 பேர் (3 சிறுவர்கள், 1 சிறுமி) மீட்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்கு குழந்தைகள் ரயில் நிலைய வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுக்களிடம்(CWC) ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தை உதவி மையங்கள் இயங்கும் இடங்கள்
24 மணி நேரத்தில், குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடித்து குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க ரயில்வே பாதுகாப்பு படை முயற்சிக்கும். குழந்தைகள் CWCயிடம் ஒப்படைக்கப்பட்டதும், ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினைகளால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினார்களா என்பதை அந்த குழு ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக ரயில்வே அமைச்சகம் டிசம்பர் 2021இல் நிலையான இயக்க நடைமுறையை(SOP) திருத்தியது. SOPக்கு இணங்க, இந்திய இரயில்வேயில் 143 ரயில் நிலையங்களில் குழந்தை உதவி மையங்கள்(CHDs) செயல்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் CHDகள் உள்ளன.