கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம்
கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்துவருகிறது. எனினும் கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் பல இன்னல்களை சந்திப்பது மட்டுமல்லாமல், முறையான பராமரிப்பு வழங்கப்படுவதில்லை என்று விலங்கு நல ஆர்வலர்கள் உள்பட பலர் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். இத்தகைய சிக்கல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கேரளாவில் அறிவியல்பூர்வமாக தீர்வு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கேரளா திருச்சூரில் உள்ள இரிஞ்சிடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை இனி சேவை செய்யவுள்ளது. இந்த யானையினை பீட்டா அமைப்பினர் தானமாக கோயிலுக்கு கொடுத்துள்ளார்கள். இந்த யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என்று கோயில் நிர்வாகம் பெயர்சூட்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கோயில் திருவிழாவில் இந்த யானை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.