வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்
தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம்-அணைக்கட்டு பகுதி அத்திமரத்துக்கொல்லை என்னும் மலைக்கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தையினை பாம்பு கடித்துள்ளது. குழந்தையை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் சாலை வசதி சரிவர இல்லாததால் பாதி வழியிலேயே உடல் முழுவதும் விஷம் பரவி குழந்தை உயிரிழந்தது. தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அவசர ஊர்தியில் குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போதும் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 10கிமீ.,தொலைவிற்கு பெற்றோர்கள் குழந்தையின் உடலை சுமந்து நடந்தே சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குழந்தை பலியானது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்திற்கு சென்றார்.
வனத்துறை மற்றும் கிராம ஊரக வளர்ச்சி துறை இணைந்து ஆய்வு
அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து, அவர் அல்லேரி மலை கிராமத்திற்கு என தனியாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும், சாலை வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் பேரில், தற்பொழுது சாலை பணிகள் அமைக்கும் பணியானது உடனே துவங்கப்பட்டு நடந்து வருகிறது. அப்பகுதி வனத்துறை மற்றும் கிராம ஊரக வளர்ச்சி துறை இணைந்து தார் சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.